திருவள்ளூரில் குடியிருக்க பட்டா கேட்டு காரை மறித்து முறையிட்ட மக்களிடம், எம்.எல்.ஏ ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் எனக்கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெருந்திட்ட வளாகத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினருக்கான ஆய்வு கூட்டம் எம்.எல்.ஏ காந்தி ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் கூட்டம் முடிந்து தனது காரில் ஏறியபோது, அவரது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் காரை மறித்து தங்கள் குடும்பங்களுக்கு பட்டா வழங்குமாறு அவரிடம் முறையிட்டனர்.
மேலும், அது தொடர்பான மனுக்களையும் அவர்கள் எம்.எல்.ஏ சுதர்சனத்திடம் அளிக்க முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்வதாக சமாதானப்படுத்திய எம்.எல்.ஏ, அந்த மக்களிடம் ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்து அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். இதனால் குறைகளை கூறி மனு அளிக்க வந்த மக்கள் பெரும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.