புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது. சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் நிரந்தரமாக வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 80 சதவீத பேருந்துகள் 100 சதவீத ஆட்டோக்கள் இயங்கி வருவதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர். இதுபோல் கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.