சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் 77 ஆயிரம் சதுரடியில் 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மைதானத்தில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட மண்தரை, மென்மைத்தன்மையை இழந்துவிட்டதால் அதில் கொட்டப்பட்ட மண்ணை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மீண்டும் புதிதாகச் செம்மண் மற்றும் களிமண்ணைக் கலந்து, அவற்றுடன் தேவையான அளவு மணலையும் இட்டு நிரப்பி புல் வளர்க்கும் பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பை மற்றும் ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மைதானத்தைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் ஒருசில போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.