கடலூர் ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கியது.
கடலூர் செம்மங்குப்பத்தில், மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாகத் திருச்சி கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்த தெற்கு ரயில்வே, கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், பள்ளி வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேருக்குச் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர், திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விசாரணை நிர்வாக ரீதியாக நடத்தப்படும் விசாரணை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.