மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சைக் கேட்க முடியாமல் கலைந்து சென்ற தொண்டர்களைப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் மீது மதிமுக குண்டர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். காலி சேர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருந்த வைகோ குறித்தும், கூட்டத்தில் மதுபோதையில் கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுகவின் மண்டலக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. சோர்ந்துவிட்ட தலைமை, கட்சியை வழிநடத்த ஆள் இல்லாத போக்கு, வாரிசு அரசியல் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் கட்சித் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்ட மதிமுகவினர் பெரும்பாலானோர் புறக்கணித்ததால் மண்டலக் கூட்டம் காத்து வாங்கியது. மண்டலக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கூட பங்கேற்காததைக் கண்டு அதிருப்தியிலிருந்த வைகோ, கூட்டம் முழுவதுமே ஒருவகை எரிச்சலுடனே காணப்பட்டார்.
ஒரு காலத்தில் வைகோவின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், தற்போது அவரின் பேச்சைக் கேட்க முடியாமல் திரண்ட கூட்டமும் கலந்து செல்லக்கூடிய சூழல் தான் நிலவுகிறது. அதன் ஒரு பகுதியாகவே சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திலும் அமெரிக்கா தொடங்கி பாகிஸ்தான் வரை என இழு இழு என இழுத்துக் கொண்டிருந்த வைகோவின் பேச்சைக் கேட்க முடியாமல் கூடியிருந்த சில தொண்டர்களும் கலையத் தொடங்கினர்.
அவ்வாறு கலைந்து சென்ற தொண்டர்களின் பக்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கவனம் திரும்பியது. கூட்டம் முடிவதற்கு முன்பாகவே கலைந்து சென்ற தொண்டர்களையும், காலியாக இருந்த சேர்களையும் படம்பிடிப்பதைக் கண்ட வைகோ கடும் கோபத்திற்கு உள்ளானார்.
மூச்சைப் பிடித்து நான் இங்குப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலிச்சேர்களையா படம்பிடிக்கிறீர்கள் என ஆவேசமடைந்த வைகோ, பத்திரிகையாளர்களை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசினார்.
அதோடு காலிச்சேர்களை படம்பிடித்த கேமிராக்களை பிடுங்கி அதில் இருக்கும் ரீல்களை பிடிங்கி எரியுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். வைகோவின் எதிர்ப்பு காரணமாகப் பத்திரிகையாளர்கள் அமைதியாக வெளியேறிய போதும், அவர்களைத் தடுத்து நிறுத்தி மதுபோதையிலிருந்த மதிமுகவினர் கண்மூடித் தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மதிமுகவினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் விருதுநகர் செய்தியாளர் ஜெயராம் உட்பட பல்வேறு முன்னணித் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாழ்க்கையில் நீண்ட அனுபவம் கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இத்தகைய ஆணவப் போக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது வைகோவின் ஏவுதலால் நடைபெற்ற இத்தகைய தாக்குதல் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சித் தொண்டர்களின் செயல்பாட்டிற்கு பல்வேறு பத்திரிகையாளர் மன்றங்களும், சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பத்திரிகை ஊடகங்களை மதிமுக என்றும் மதிக்கும் எனவும் சாத்தூரில் நடைபெற்ற நிகழ்வு வருந்தத்தக்கது எனவும் எனவும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனிப்பட்ட முறையிலும் கட்சி சார்பாகவும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.