கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழாக்காலங்களில் தவிர்க்க முடியாத அளவிற்கு இடம்பெறும் சிக்காட்டத்தின் கலைஞர்கள் தற்போது வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சிக்காட்டம் என்றால் என்ன ? அது சார்ந்திருக்கும் கலைஞர்கள் விடுக்கும் கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஜிக்கு ஜிக்கு என இசையைக் கொண்ட இந்த கலை ஆரம்பக் காலத்தில் ஜிக்காட்டம் என அழைக்கப்பட்ட நிலையில் காலப்போக்கில் மருவி சிக்காட்டம் என மாறியுள்ளது. பண்டைய காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குத் தகவல் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இக்கலையை மட்டுமே நம்பி கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.
வருடத்திற்கு 6 மாதங்கள் மட்டுமே கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான சூழலில் மீதமிருக்கும் ஆறு மாத காலத்திற்கு வேறு தொழிலை நாட வேண்டிய சூழலுக்கு சிக்காட்ட கலைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பறையாட்டம், தெம்மாங்காட்டம், ஒயிலாட்டம், துண்டாட்டம் என நான்கு வகை ஆட்டங்களைக் கொண்ட இந்த சிக்காட்டம், கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திருவிழாக்கள் மற்றும் சடங்கு முறைகளில் பயன்படுத்தப்படும் இக்கலைகள் தற்போது வெளிநாடுகள் வரை விரிவடையத் தொடங்கியுள்ளது. இசைக்கருவையை இசைத்துக் கொண்டே அதற்கு ஏற்றபடி நடனமாடும் இந்த சிக்காட்டத்தை கற்க தற்போது மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர்.
பொள்ளாச்சியைச் சுற்றி மட்டும் சுமார் 20 ஆயிரம் கலைஞர்கள் சிக்காட்ட கலைஞர்களாக இருக்கும் நிலையில் திருவிழா போன்ற காலங்களில் மட்டுமே அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைப்பதால் மீதமுள்ள நாட்களில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
சிக்காட்ட கலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தமிழக அரசு உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.