சென்னை ஏழுகிணறு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள பெரியன்னா தெருவில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஓஜி வகை கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த ஸ்ரீபிரேம் குமார் என்பவரைக் கைது செய்த போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திரைப்படங்களில் துணை இயக்குநராக ஸ்ரீபிரேம் குமார் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
மேலும், மலேசியாவில் உள்ள அஸ்லாம் அகஸ்டின் என்பவர் அனுப்பி வைக்கும் கஞ்சாவை, இருவரின் உதவியுடன் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலெக்ஸ் சந்தோஷ், ராஜன் ஆகியோரை கைது செய்த போலீசார், அஸ்லாம் அகஸ்டினை தேடி வருகின்றனர்.