முழுமையான விசாரணைக்கு பிறகே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக கே.சி வீரமணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில், தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முழுமையான விசாரணைக்கு பிறகே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக கே.சி வீரமணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.