சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு திருமண மண்டபம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்புவனத்தில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு நடத்தப்படும் திருமண மண்டபத்தை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
அதில், திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் குடோன் கட்டுவதற்காக அனுமதி பெற்றுவிட்டு, விதிகளை மீறிக் கட்டப்பட்ட செல்லமுத்து திருமண மண்டபத்தால் மாணவர்கள், பக்தர்கள் ஒலி இரைச்சலால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் திருமண மண்டபம் மூலம் கிடைக்கும் பெரும் லாபத்துக்கு வரியும் முறையாகச் செலுத்தப்படாததால், அதனை இடித்து அகற்ற வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த போது, குடோனாக பயன்படுத்துவதற்காகத் தான் அனுமதி பெறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட கட்டடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கத் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர்.