பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியதாகவும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியின் 62ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற பத்மா சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அஜித்தோவல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் 23 நிமிட தாக்குதலில் 9 இலக்குகள் குறிவைத்து துல்லியமாகத் தகர்க்கப்பட்டதாகக் கூறினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகள், ரேடார்கள், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மே 10ஆம் தேதிக்கு முன், பின் எனப் பாகிஸ்தானின் 13 விமான தளங்களின் புகைப்படங்களை வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள், இந்தியாவில் சேதமடைந்ததாக ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியுமா என்றும் அஜித் தோவல் கேள்வி எழுப்பினார்.