30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆப்ரேஷன் அறம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ஆப்ரேஷன் அறம், அகழி ஆகியவற்றின் மூலம் கோவை காவல்துறையினர் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் ஆந்திரா கர்நாடகா காவல் துறையினர் இணைந்து நீண்ட ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த மூன்று தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
இதில் கைதாகி உள்ள அபூபக்கர் சித்திக்கை பொறுத்தவரை 5 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார் என்று அவர் கூறினார்.
முகமது அலி பொறுத்தவரை ஏழு வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார், இந்த இருவரையும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கைது செய்து உள்ளோம் எனக் கூறினார்.
டைலர் ராஜாவைப் பொறுத்தவரை நான்கு வழக்குகளில் தொடர்புடையவர் ஆக உள்ளார் இவரைக் கர்நாடக காவல்துறையினுடன் இணைந்து கைது செய்துள்ளோம் என்று கூறினார்.
சட்டப்படிதான் இவர்கள் மீது தீவிரவாத வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீண்டும் காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களில் டெய்லர் ராஜா மட்டும் தடை செய்யப்பட்ட அல் உமா அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் உள்ளனர் என அவர் கூறினார்.
மேலும், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக விமர்சிக்கப்பட்ட நிகிதா வழக்குகள் குறித்த கேள்விக்குத் தமிழகத்தில் உள்ள ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என அவர் கூறினார்.
தமிழ்நாடு காவல்துறை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் தேசிய ஆவண பதிப்பகத்தின் தரவுகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்றார்*
கண்டிப்பாக இந்த வழக்கில் பணியாற்றிய காவல் துறையினருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.