பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான சான்றுகளை நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத நிதி ஆபத்து மதிப்பீட்டில், ஆப்கானிஸ்தான், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தவிர பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களிடமிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாத நிதி அபாயங்கள் குறித்த விரிவான புதுப்பிப்பு என்ற அறிக்கையைத் தயாரித்து, நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் (Counter-Terrorism Committee) பயங்கரவாத எதிர்ப்புக் குழுவும் பிரான்ஸும் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
பயங்கரவாத குழுக்கள், தங்கள் தாக்குதல்களுக்கு நிதியளிக்கவும், திட்டமிடவும், செயல்படுத்தவும் இ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் சந்தைகள் மற்றும் FINTECH சேவைகள் போன்ற அன்றாட டிஜிட்டல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த புல்வாமா குண்டுவெடிப்பு மற்றும் 2022 ஆம் ஆண்டு கோரக்நாத் கோவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கோள் காட்டி, பயங்கரவாதிகளால் டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனங்களின்மீது, வெடிபொருட்கள் நிரப்பிய Maruti Suzuki Eeco (மாருதி சுசுகி ஈக்கோ) வாகனத்துடன் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும், தாக்கத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்ட அலுமினியம் பவுடரும், அமேசான் இ-காமர்ஸ் தளம் மூலம் பயங்கரவாதிகளால் வாங்கப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் VPNகளைப் பயன்படுத்தி கருத்தியல் ரீதியாகப் பயங்கரவாதத்தைத் தூண்டுவதையும், நிதி நடவடிக்கை பணிக்குழு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2022-ல் இல் உத்தரப்பிரதேசத்தின் கோரக்நாத் கோவில் மீதான பயங்கரவாத தாக்குதலை விவரித்துள்ளது.
ஈராக்கில் இஸ்லாமிய அரசு மற்றும் லெவண்ட் (ISIL) பயங்கரவாத கொள்கையால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாதி, கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்றும், அதற்காக, PayPal மூலம் 44 தனித்தனி சர்வதேச பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளார் என்றும் அதன் மூலம் ISIL-க்கு ஆதரவாக சுமார் 7 லட்சம் ரூபாயை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதீத வளர்ச்சி அடைந்துள்ள FINTECH நிறுவனங்கள் ஆன்லைன் கட்டண சேவைகளுக்குச் சலுகைகள் வழங்குகின்றன. மேலும், பெரும்பாலும் போலிக் கணக்குகள் மூலம் பரிமாற்றங்களைச் செய்யவும் அனுமதிக்கின்றன.
கூடுதலாக, சில கட்டண வழிமுறைகள் content delivery network எனப்படும் ஹோஸ்டிங் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையிலான பரிமாற்றாங்களில் பணத்தை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
எனவே,பயங்கரவாத ஆதரவாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும், திரள் நிதி (crowdfunding) பிரச்சாரத்தைத் தொடங்கி, ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் மூலம் அதிக அளவிலான நிதியைப் பெறுவதற்கும் பயங்கரவாதிகள் இத்தகைய ஆன்லைன் சேவைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் பிரச்சாரத்தைப் பரப்புவதற்கும், உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும், தூண்டுவதற்கும், தீவிரமயமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், சில சமயங்களில் நிதி திரட்டுவதற்கும் அதிகளவில் ஆன்லைன் வீடியோ கேம்கள் மற்றும் கேமிங் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், சில பயங்கரவாத அமைப்புகள் பல தேசிய அரசிடம் இருந்து நிதி மற்றும் பிற வகையான உதவிகளைத் தொடர்ந்து பெற்றுவருகின்றன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதியும் ஆயுதங்களும் வழங்கி ஆதரித்து வருகிறது என்றும்,உலகின் எங்குப் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் அதன் வேர் பாகிஸ்தானில் இருக்கும் என்றும் நீண்ட காலமாகவே இந்தியா கூறிவருகிறது. பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புல்வாமா மற்றும் கோரக்நாத் பயங்கரவாத தாக்குதல்களை நிதி நடவடிக்கை பணிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது,பாகிஸ்தான் மீதான இந்தியாவின் குற்றச் சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்த நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு கிடைக்காமல் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்குச் சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தி இருந்தது. தற்போது நிதி நடவடிக்கை பணிக் குழு, தனது அறிக்கையின் மூலம் அதைச் சான்றுகளுடன் விரிவாக நிரூபித்துள்ளது.