கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சமி நில பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆயிரத்து 891 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலம், தீர்வை நிலம், கண்டிசன் நிலம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டன.
அத்தகைய பஞ்சமி நிலங்களைப் பட்டியலின சமூகத்தினரைத் தவிர்த்து வேறு எந்த சமூகத்தினரும் உரிமை கோர முடியாத அளவிற்கு அந்த காலத்திலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களுக்காகத் தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவையில் மட்டும் அத்தகைய நிலங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.
கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை இயற்றத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தவறான தகவலை அளித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரம் ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவரது வாரிசுதாரர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்திய போது தான் அந்நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதே தெரியவந்துள்ளது.
எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சமி நிலைச்சட்டத்தை இயற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.