உலகின் மிகப்பெரிய சைபோர்க் படையை முதல் முறையாகச் சீனா உருவாக்கியுள்ளது. மிகக் குறைந்த எடை கொண்ட பூச்சியின் மூளைக் கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்கிச் சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். அதென்ன சைபோர்க் படை ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு சைபோர்க் என்பது உயிரியல் மற்றும் எந்திர பாகங்களின் சேர்க்கையாகும். அது ஓரளவு எந்திரக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் பாகங்களைக் கொண்ட எந்த உயிரினமும் சைபோர்க் ஆக இருக்க முடியும். ஒரு சின்னப் புல் கூட ஒரு சைபோர்க்காக இருக்கலாம்.
DC காமிக்ஸ் கதையில் தான் முதன்முறையாகச் சைபோர்க் கதாபாத்திரம் வந்தது. அதன்பிறகு உலகின் பல நாடுகள் உயிரினங்களையும், இயந்திரங்களையும் இணைத்து ‘சைபோர்க்’ தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கின.
சைபோர்க் ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியிலிருந்து வருகின்றன. ஏற்கெனவே, உலகின் மிக எடையுடைய பூச்சிக் கட்டுப்பாட்டுக் கருவியைச் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
இது வண்டுகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்த கூடியதாக இருந்தது. மேலும் இந்தக் கருவி, சுமார் 200 மில்லிகிராம் எடை கொண்டதாக இருந்தது. மேலும், குறைந்த தூரம் பயணிக்கும் திறன் கொண்ட சைபோர்க், விரைவில் சோர்வடைந்து விடுவதாகக் கூறப்பட்டது.
சைபோர்க் தொழில்நுட்பத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, பல்வேறு நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இந்நிலையில், சீனாவின் பெய்ஜிங் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாவோ ஜிலியாங் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, உலகின் மிக இலகுவான பூச்சியின் மூளைக் கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்கிப் புதிய சாதனை படைத்துள்ளது.
வெறும் 74 மில்லிகிராம் எடையுள்ள இந்தக் கருவி, தேனீயின் முதுகில் பொருத்தப்பட்டு, அதன் மூளையில் மூன்று ஊசிகளைச் செலுத்துகிறது. மின்னணு துடிப்புகள் மூலம் கட்டளைகளை உருவாக்கி, தேனீயை இடபுறமும் , வலப்புறமும் திருப்ப வைக்கிறது.
முன்னேறவும், பின்வாங்கவும் வைக்கிறது. சோதனைகள் 90 சதவீதம் வெற்றியாக முடிந்துள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
சைபோர்க் தேனீ, முந்தைய சைபோர்க் பூச்சிகளை விடவும் சிறப்பாகச் செயல்படுவதாக கூறியுள்ள சீன விஞ்ஞானிகள், சைபோர்க் கரப்பான் பூச்சியைவிடக் குறைந்தபட்ச விலகலுடன் நேரான பாதைகளில் பறந்தன என்றும் கூறியுள்ளனர்.
நீண்ட சகிப்புத்தன்மை மற்றும் அதிக இயக்கம் கொண்ட தேனீக்கள் ஓய்வின்றி 5 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டவையாகும். மொத்த உடல் எடையில் 80 சதவீதத்துக்குச் சமமான சுமைகளைச் சுமக்கும் திறன் கொண்டவையாகும்.
எனவே சைபோர்க் தேனீக்கள் இரகசிய பயன்பாட்டுக்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. 600 மில்லிகிராம் எடையுள்ள நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி, சைபோர்க் தேனீ பறப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதால், இந்தச் சவாலைச் சமாளிக்கவும் சீன விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ‘சைபோர்க்’ தேனீக்களை, ராணுவ உளவுப் பணிகளுக்கும், நகர்ப்புற பயங்கரவாதத் தடுப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.