சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீனின் மர்ம மரணம் அடுக்கடுக்கான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கட்டப்பட்ட உடலைத் தற்கொலையெனக் காவல்துறை குறிப்பிட்டது எப்படி ? என்ற கேள்வியும் எழுந்திருக்கும் நிலையில் நவீன் மரணம் தொடர்பாக விரிவான செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.
என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் ….. திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலைக்குச் செய்யப்போவதாக அனுப்பிய மின்னஞ்சலில் இடம்பெற்றிருந்த வரிகள் தான் இவை… ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் பொலினேனி கடந்த மூன்றாண்டுகளாகச் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
அண்மையில் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைத் தணிக்கை செய்த நிறுவனம், 40 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதை கண்டுபிடித்தது. அந்தப் பணத்தை மேலாளர் நவீன் பொலினேனி கையாடல் செய்திருப்பதும், அந்தப் பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்கில் மாற்றி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
திருமலா பால் நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. நவீனை போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது, கையாடல் செய்த பணத்தை திரும்பிக் கொடுத்துவிடுவதாகவும், தன்னை கைது செய்ய வேண்டாம் எனவும் நவீன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது இல்லத்தின் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் நவீன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பாக நவீன், அவரது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவன மின்னஞ்சல் முகவரிகளுக்குத் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு பணத்தை மீண்டும் தந்துவிடுகிறேன் எனக் கூறிய பின்பும் தம்மை மிரட்டியதால் தற்கொலை செய்யப்போகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய தற்கொலைக்குத் திருமலா பால் நிறுவனமே காரணம் எனக்கூறியிருக்கும் நவீன், என்னுடைய மரணம் உங்களின் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போலீசாரின் விசாரணைக்குப் பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது அவரை யாரேனும் கொலை செய்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், நவீன் இறப்பதற்கு முன்தினம் பார்க்க வந்த திருமலா பால் நிறுவனத்தின் ஊழியர்கள், பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் உன்னைச் சும்மா விடமாட்டோம் என மிரட்டியதாகவும், போலீசாரும் நவீனுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திருப்புவனம் காவல் மரணம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் காவல் அதிகாரிகளின் நெருக்கடியால் மீண்டும் ஒருவர் மர்மமான முறையில் இறந்திருக்கும் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனக்குரலை எழுப்பியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க வழக்கை விசாரித்த கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 40 கோடி ரூபாய் அளவிற்கான புகாரை மேல் அதிகாரிக்குத் தெரியப்படுத்தாமல் திருமலா பால் நிறுவனத்துடன் இணைந்து நவீனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. திருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய பெண்களை அறைந்ததோடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டதும் இதே பாண்டியராஜன் தான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, கொளத்தூர் துணை ஆணையர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலைத் தற்கொலை என முடிவு செய்தது எப்படி? 40 கோடி அளவிற்கான புகாரை மேல் அதிகாரிக்குத் தெரியப்படுத்தாமல் பாண்டியராஜன் மூடி மறைத்தது ஏன்? திருமலா பால் நிறுவனத்தினரின் மிரட்டலை நவீன் காவல்துறையிடம் தெரிவிக்காதது ஏன்? காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நவீன் மரண வழக்கில் எழுந்துள்ளது. வழக்கின் விசாரணையை மேற்கு மண்டல காவல் துணை ஆய்வாளர் விசாரிபபாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் முழு அறிக்கை வெளியானால் மட்டுமே நவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்பது தெரியவரும்.