திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் விசாரணையின்போது உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அஜித்குமார் உட்பட திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் விசாரணை கைதிகளாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
முன்னதாக தவெக ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வெயில் தாக்கம் காரணமாக ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். தவெகவின் ஆர்ப்பாட்டத்தால் சிவானந்தா சாலை ஸ்தம்பித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.