திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து நேரிட்ட தண்டவாளத்தின் ஒருபகுதி சீரமைக்கப்பட்டதால், விரைவு ரயில் சேவை தொடங்கியது.
திருவள்ளூர் – ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் நேற்று தடம்புரண்டு தீ விபத்து நேரிட்டது. 52 டேங்கர்களில் 4 டேங்கர்களில் மட்டுமே தீப்பிடித்த நிலையில், மற்ற டேங்கர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.
4 டேங்கர்களில் பற்றி எரிந்த தீயை 7 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த விபத்தால் அந்த வழியாக ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
தீ விபத்து நிகழ்ந்த தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டதால், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, ஆலப்புழா ஆகிய 3 விரைவு ரயில்கள் குறைந்த வேகத்தில் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இருமார்க்கத்திலும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, திருவள்ளூர் ரயில் நிலையம் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து புறநகர் ரயில் சேவை சீரானதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.