மிசோரமின் பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம் 26 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பைராபி – கோலாசிப் மாவட்டத்தின் சாய்ராங் இடையே 51 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரயில் பாதை அமைக்க கடந்த 1999ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அடர்ந்த காடுகள், வெளிச்சம் இல்லாதது, உள்ளூர் பிரச்னைகளால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சிரமம் என கண்டறியப்பட்ட நிலையில், 2003ஆம் ஆண்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
மிசோரம் ரயில் திட்டத்தை 2008ஆம் ஆண்டு தேசிய திட்டம் என்று காங்கிரஸ் அறிவித்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
51 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 48 சுரங்கப் பாதைகள், 55 பெரிய மற்றும் 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பைராபி – சாய்ராங் ரயில் பாதை திட்டம் நிறைவடைந்ததாகவும், ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.