பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடந்த பேரணியில், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வண்ண விளக்குகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
1789ஆம் ஆண்டு வரை பிரான்ஸில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சியால் அகற்றப்பட்டதன் நினைவாக ஆண்டும்தோறும் ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள், பிரான்ஸின் தேசிய தினத்திற்கு முந்தைய நாள் மாலை, தீப்பந்நம் ஏந்தி ஊர்வலமாக செல்வது வழக்கம்.
அந்த வகையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. கடற்கரை சாலையில் இருந்து பிரெஞ்சு தூதரகம் வரை நடைபெற்ற பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் இந்தியா மற்றும் பிரான்ஸ் கொடிகளையும், வண்ணமயமான விளக்குகளையும் ஏந்தி சென்றது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.