நெமிலி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலையில் நெல்மணிகளைக் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்படுவதால், கடந்தாண்டு இந்த பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
நடப்பாண்டு, கீழ்வீதி கிராமத்துக்கு பதிலாக மகேந்திரவாடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கீழ்வீதி கிராமத்தில் வழக்கம்போல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால், மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் 2 மூட்டை நெல்மணிகளைக் கொட்டி, அரசு பேருந்தைச் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.