திருவாரூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தப்பளாம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட காரியாங்குடியில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்குக் காலை உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் பள்ளிக்கு வந்தபோது சமையலறையின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இரவு நேரத்தில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் மளிகை பொருட்களைத் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவைக் கலந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.