திருவாரூர் அருகே பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வேங்கை வயல் சம்பவத்தில் புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கிய திமுக, உண்மை குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே அக்கறை காட்டுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், நாகரீக சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த கொடூரச் செயல், தமிழகத்தில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருவதாகத் தெரிவித்துள்ள எல்.முருகன்,
வழக்கம்போல் சாக்குப்போக்கு சொல்லாமல் காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், குற்றவாளிகள் மனதில் மனிதத்தன்மையோ, காவல்துறை மீது பயமோ இல்லாததையே திருவாரூர் சம்பவம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.