பெருந்தலைவர் காமராஜரின் 123ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரின் 123ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில், அவரது சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் நிறுவப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்குத் தமிழக பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜரின் திருவுருவச் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக சார்பில் காமராஜரின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய ஜெயக்குமார், கல்விக்காகச் சிறந்த திட்டங்களை வழங்கியவர் காமராஜர் எனப் புகழாரம் சூட்டினார்.
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.