ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்தும், வழக்கின் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்..
2017ம் ஆண்டு ஏமனில் மயக்க ஊசி செலுத்தி தனது தொழில் கூட்டாளியைக் கொலை செய்தார் என்பதுதான் கேரள செவிலியர் நிமிஷா பிரியா மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக மரண தண்டனையைக் கடைசி நேரத்தில் நிறுத்திவைத்துள்ளது ஏமன் அரசு….
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா. அவர் ஏமன் தலைநகர் சனாவில் தலால் அப்து மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், மஹ்தியோ, கிளினிக்கின் உரிமம், நிமிஷா பிரியாவின் வருவாய், நகைகள், பாஸ்போர்ட் பேன்றவற்றை அபகரித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் இருந்து தப்பிக்கவும், பாஸ்போர்ட்டை மீட்கவும் நினைத்த நிமிஷா, 2017ம் ஆண்டு மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். துரதிருஷ்டவசமாகக் கூடுதலாக மயக்க மருந்து செலுத்தியதில் மஹ்தி உயிரிழக்க நேரிட்டது. இந்த வழக்கில் நிமிஷாவை ஏமன் நீதிமன்றம் குற்றவாளி என 2020ம் ஆண்டு அறிவித்தது. 2023ம் ஆண்டு அவரது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், 2025 ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
ஏமனில் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பத்தினரைக் குருதிப் பணம் எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்கச் செய்வதுதான், அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே வழி.
இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிமிஷாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடினர். முதற்கட்டமாக மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர்கள், நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற 8 கோடியே 60 லட்சம் ரூபாய் குருதிப் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்தப் பணத்தை மஹ்தி குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நிமிஷாவின் தண்டனை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது நிமிஷாவின் மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருதிப் பணத்தை மஹ்தியின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்வார்களா? அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.