மாமல்லபுரம் கடற்கரையில் வரும் ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடற்கரையில் ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடருக்கான அறிமுக நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, SDAT உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் சர்ஃபிங் மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்தியா சார்பில் தொடரில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட அணியினர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளதாகவும், இந்தியாவில் முதல் முறையாக 3.3 கோடி ரூபாய் செலவில் இந்த தொடர் தமிழகத்தில் நடைபெறவுள்ளது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.