பயங்கரவாதம், பிரிவினைவாதம்,தீவிரவாதத்தை எதிர்த்து போராடத் தொடங்கப்பட்ட பட்டது தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதை நினைவூட்டிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராகச் சீனா உள்ளது. இந்த ஆண்டுக்கான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாகச் சீனா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கையும் துணை அதிபர் ஹான் ஜெங்கையும் சந்தித்துப் பேசியுள்ளார். 2020 ஆம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கு எல்லை மோதலுக்கு ஜெய்சங்கர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்ட பிறகு, இந்தியச் சீன உறவு மேம்பட்டு வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், தனது சீனப் பயணம் அதைப் பராமரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச புவிசார் அரசியல் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் உலகின் பெரிய பொருளாதாரங்களாகவும் விளங்கும் இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறாமலும் போட்டிகள் மோதலாக மாறாமலும், அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நேர்மறையான பாதையில் தொடர்ந்து வளர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகள் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார்.
பரஸ்பர மரியாதை, ஆர்வம் மற்றும் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளைக் கையாள்வதன் மூலம் இந்திய- சீன உறவு சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளார். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த மூன்று தீமைகளும் ஒன்றாகவே செயல்படுகின்றன என்றும், அதற்கு நேரடி உதாரணம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஆகும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
காஷ்மீரின் சுற்றுலா வளர்ச்சியைச் சீர்குலைப்பதையும், மத ரீதியான பிரிவைத் தூண்டுவதையும் நோக்கமாக வைத்து வேண்டுமென்றே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறிய ஜெய்சங்கர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவின் கோபத்தை எதிரொலித்தது என்றும், பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தது என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜெய்சங்கர் எச்சரித்தார். சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு இணங்க பரஸ்பர மரியாதையுடன் ஒருவருக்கொருவர் எல்லைகள் மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும். உறுதியான வழிகளில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்பு முதல் பாரம்பரிய மருத்துவம் வரை மற்றும் பொது உள்கட்டமைப்பு முதல் டிஜிட்டல் வளர்ச்சி வரை என அரசியலை விட நீடித்து உழைக்கக்கூடிய நடைமுறை உறவுகளை மேம்படுத்தவேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை அர்த்தமுள்ளதாக்க இந்தியாவின் இந்த மூன்று முக்கிய அணுகுமுறைகளை வழங்கிய ஜெய்சங்கர், உண்மையான தொடர்புகள் இல்லாமல் ஒத்துழைப்பு பற்றிய பேச்சு வெற்றுத்தனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
உறுப்பு நாடுகளுக்குள் உறுதியான போக்குவரத்து இல்லாதது வர்த்தகத்தைப் பாதிக்கிறது என்று வாதிட்ட ஜெய்சங்கர், இந்தியாவை ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் 7,200 கிலோமீட்டர் சரக்கு வழித்தடமான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை ஆதரிக்குமாறு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் விரைவாக முடிக்கப் பட்டால், உறுப்பு நாடுகள் தங்களுக்குள் உலகத்துடனும் வர்த்தகம் செய்யும் போக்கையே மாற்றிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கணிக்க வேண்டிய அச்சுறுத்தல்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. கண்களை மூடிக்கொண்டிருந்தால் பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் மறைந்துவிடாது. உறுதியாக நின்று, ஒன்றாகச் செயல்பட்டு, நெருக்கடியை அகற்றுவோம் என்று இந்தியாவின் செய்தியை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகுக்குச் சொல்லியிருக்கிறார்.