பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி என்ன தீவு பார்க்கலாம் விரிவாக..
பிரேசிலின் சா பாவ்லோ நகரின தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த தீவுதான் உலகின் மிகவும் ஆபத்தான தீவு என்று வர்ணிக்கப்படுகிறது. அதன் பெயரை இல்ஹா டா குயிமாடா கிராண்டே எனக் கூறுவதை விடப் பாம்புத் தீவு என்றால்தான் அதன் வீரியம் நமக்குப் புரியும்.
அடர்ந்த மரங்கள், கரடு முரடான பாறைகள் கொண்ட இந்த கொடிய தீவு 4000 விஷ பாம்புகளின் கூடாரமாக உள்ளது. தங்க நிறத்தில் ஈட்டி போன்ற தலையைக் கொண்ட இப்பாம்புகள் தங்க ஈட்டித் தலை பாம்புகள் என்ற பெயரைப் பெற்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததன் காரணமாகப் பிரேசிலில் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
பாலூட்டிகள், வேட்டை விலங்குகள் இல்லாமல் பிரிந்த இந்த தீவு ஆயிரக்கணக்கான தங்க ஈட்டித் தலை பாம்புகளின் வசிப்பிடமாகவே மாறிவிட்டது, மரத்தில் சர்ரென ஏறும் இவ்வகை பாம்புகள், கொடிய விஷத்தின் மூலம் பறவைகளை இரையாக்கிப் பசியாறுகின்றன.
தங்க ஈட்டித் தலை பாம்புகள், சாதாரண விஷ பாம்புகளை விட 5 மடங்கு கொடிய விஷம் கொண்டவை. மரத்தின் உச்சிக்குச் சென்று காத்திருக்கும் இவ்வகை பாம்புகள் இளைப்பாற வரும் சிலியன் எலினேனியா என்ற பறவைகளை இரையாக்குகிறது. ஒரே கடியில் இந்தப் பாம்புகள் வெளிப்படுத்தும் விஷம், சிறுநீரகம் செயலிழப்பு, உடலுக்குள் ரத்தக்கசிவு, திசு நசிவை ஏற்படுத்திவிடும்.
இங்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சதுர மீட்டாருக்கு ஒரு பாம்பு என்ற அளவில் இருக்கும் இந்த தீவில், பாம்பு கடித்தால் அவசரக் காலங்களில் மீட்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது என்பதால்.மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இத்தீவுக்குச் செல்ல வேண்டுமெனில் உரிய அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள், விஷ முறிவு மருந்துகள், மருத்துவ உதவியாளர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன.
எனினும், சட்டவிரோத வேட்டை கும்பல் மற்றும் இனப்பெருக்கமின்மை போன்ற காரணங்களால், தங்க ஈட்டித் தலை பாம்புகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாம்புத் தீவுக்கே பயத்தைக் காட்டியுள்ள சட்டவிரோத வேட்டை கும்பல் உண்மையில் பாம்பைக் காட்டிலும், கொடிய விஷம் கொண்டவர்கள்தான்.