விருதுநகர் மாவட்டம், அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர்.
அர்ச்சுனாபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நல்லதங்காள் கோயிலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சிலைகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அங்குக் கிராம மக்களே ஒன்று சேர்ந்து பாலாலயம் நடத்தினர். இந்நிலையில் நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் சார்பாகச் செய்யப்பட்டுள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.