அரசு மருத்துவக் கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 50 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், அதனை இயக்க 7 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்தது.
இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழகத்தில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞர் பிரசன்னா ஆஜராகி கோரிக்கைகளை முன்வைத்தார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.