கும்மிடிப்பூண்டி அருகே, சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குற்றம் நடந்து 5 நாட்கள் கடந்தும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
சிறுமி என்றும் பாராமல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இதுபோன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம், இத்தனை தைரியமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி, இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.
காவல்துறை இனியும் தாமதிக்காமல், உடனடியாக இந்தக் குற்றவாளியைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.