மடப்புரம் அஜித்குமாரின் இறப்பு சான்றிதழை அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அஜித்குமாரின் இறப்பு சான்றிதழை பெற முயன்ற அவரது சகோதரர் நவீன்குமார், பிரேத பரிசோதனையின்போது வழங்கப்பட்ட ஆவணங்களை கேட்டு மதுரை அரசு மருத்துவமனையில் முறையிட்டுள்ளார்.
ஆனால் அனைத்து ஆவணங்களும் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் கேட்டபோது ஆவணங்கள் வழங்கப்படவில்லை என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து இறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு நவீன்குமார் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அஜித்குமாரின் இறப்பு சான்றிதழை நவீன்குமாரிடம் ஒப்படைத்தனர்.