சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி, பொதுமக்கள் தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் தினமும் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைக்கு பணிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என்று குற்றஞ்சாட்டி, பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி மார்க்க புறநகர் ரயில் முன் நின்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதால், ஒருமணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் இயங்கத் தொடங்கின.