காமராஜரை கொச்சைப்படுத்தி பேசியதற்கு திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுகவினருக்கு தமிழக பாஜக சார்பில் கண்டனங்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களின் மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதல்ல என்றும், காமராஜரை கொச்சைப்படுத்திப் பேசுவது திமுகவினரின் வழித் தோன்றல்களுக்கு புதிதல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜரை, திருச்சி சிவா குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான் என்றும். காமராஜரை கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.