தமிழக ஆளுநர் வழங்கிய கேடயத்தில் திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவர் மோகன் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 4 மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும், ஆளுநர் வழங்கிய கேடயத்தில் திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதில் ஆளுநருக்கோ, ராஜ்பவனுக்கோ எந்த தொடர்பும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நினைவு பரிசுகளில் சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் மருத்துவ நிபுணர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டதாக கூறியுள்ள அவர், பிழைக்கு முழு பொறுப்பேற்று ஆளுநருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். ,
எதிர்பாராமல் ஏற்பட்ட பிழையை எண்ணி வருந்துகிறேன் என்றும், இந்த பிரச்னையை ஊடகங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் மருத்துவர் மோகன் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.