ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி ஆடி மாத பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் நம்பூதிரி தலைமையில் சபரிமலை மேல் சாந்தி அருண் குமார் நம்பூதிரி கோயில் நடை திறந்து தீபம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வியாழக்கிழமை முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன.
தயா ஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இம்மாதம் 21-ந் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும் என்றும் 21-ந்தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.