தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், சாரல் மலையில் வெறும் கையால் தீச்சட்டி எடுத்து 5 மணி நேரம் நகர்வலம் வந்த பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரியகுளத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு கௌமாரியம்மன் கோயிலில், 3 நாட்கள் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
விழாவின் 2ஆம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இதன் ஒருபகுதியாக 30 பக்தர்கள், குழுவாக சேர்ந்து வெறுங்கையில் தீச்சட்டி ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக நகர்வலம் வந்தனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தீச்சட்டியுடன் நகர்வலம் வந்து, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இளைஞர்கள் தீச்சட்டி எடுத்து ஆடிவந்தபோது சாரல் மழை பெய்தாலும், அதனை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து ஆரவாரத்துடன் அவர்களை உற்சாகப்படுத்தினர்.