சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்புக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில், டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டூழியங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. அதில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி சுல்தான்களின் எழுச்சி, வீழ்ச்சி பற்றியும், அவர்களை எதிர்த்து நின்ற விஜயநகர பேரரசு, மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின் எழுச்சி பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிராக மாலிக் கபூர் செயல்பட்டதாகவும், அவர் மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோயில்களை அழித்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முகலாய மன்னரான பாபர், மக்களை அழித்து அவர்களின் மண்டை ஓடுகள் மீது தன் சாம்ராஜ்யத்தை நிறுவியதாக விவரிக்கப்பட்டுள்ளது. அக்பரின் ஆட்சி கொடூரமும், சகிப்புத்தன்மையும் கலந்ததாக இருந்தது. அதே சமயம், இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், தற்போது இருக்கும் சமூகங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற முன்னெச்சரிக்கை வாசகமும் அந்த பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.