பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை நடந்தது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அக்ரஹாரம், வெப்படை, குமாரபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது.
இதில், சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிபாளையம் அடுத்த அன்னை சத்தியாநகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை, பெங்களூர், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று இடைத்தரகர்கள் மூலம் கிட்னி விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி விற்பனை நடந்தது தொடர்பாக விசாரணை நடத்த நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர், அன்னை சத்யா நகர் மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.