அமெரிக்காவைத் தாக்கிய புயலால் நியூயார்க், நியூஜெர்சி நகரங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் வெள்ளமாகக் காட்சியளிக்கும் நிலையில், இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் நிவாரண பணிகளும் தொடங்கியுள்ளன.
கடலில் மிதக்கும் படகுகள் போன்று தத்தளிக்கும் வீடுகள்…. காகிதக் கப்பல் போன்று மூழ்கிய வாகனங்கள்… ரயில் நிலையங்களில் நீரூற்று போன்று பெருக்கெடுத்த வெள்ளம்….என அமெரிக்காவைத் தாக்கிய புயல் தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சிக்கிய 131 பேர் பலியான நிலையில், 97 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில். புயலின் தாக்கத்தால் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.
நியூயார்க் நகரில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விரைவு சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. ரயில் நிலையங்களில் 4.5 சென்டி மீட்டர் மழை அளவுக்கே கட்டமைப்பு வசதி உள்ளதாகக் கூறும் அதிகாரிகள், இவ்வளவு மழை பெய்யும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று புலம்பினர்.
நியூ ஜெர்சியில் 2 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், குடியிருப்பு பகுதிகள். வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
பிளேன்ஃபீல்ட் பகுதியில் வாகனம் ஒன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத நிலையில் நியூஜெர்சியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.