உலகின் மிக நீளமான ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. மகாபாரத அர்ஜுனனின் வெற்றி வில்லான காண்டீபம் என்று பெயரிடப்பட்டுள்ள Astra Mk 3 ஏவுகணை , இந்திய விமானப்படைக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக அமைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய விமானப்படையின் வான் போர் திறன், நாட்டின் போர் வல்லமையின் முதுகெலும்பாக உள்ளது. ஒரு காலத்தில், ரஷ்யாவின் R-77 ஏவுகணைகள், பிரான்ஸின் MICA ரக ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலின் ஏவுகணைகளையே இந்தியா பயன்படுத்தி வந்தது.
ஒரு நெருக்கடியான நேரத்தில், ஏவுகணை விநியோகச் சங்கிலி துண்டிக்கப்பட்டாலோ? உதிரிப் பாகங்கள் கிடைக்காமல் போனாலோ? என்ன செய்வது? என்ற யோசனையின் விளைவாக, இந்தியா தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கியது.
1990-களின் முற்பகுதியில் DRDO விஞ்ஞானிகள் காட்சிக்கு அப்பாற்பட்ட ஏவுகணையை உள்நாட்டில் தயாரிக்கக் கனவு கண்டனர். அப்போது ஒரு சிறிய திட்டமாகத் தொடங்கிய ஏவுகணை திட்டம், இப்போது உலகின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளுடன், நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக வெற்றிப் பெற்றுள்ளது.
Beyond-Visual-Range அதாவது காட்சிக்கு அப்பால் ஏவுகணை என்பது 300 கிலோமீட்டர் தொலைவில் இருந்து, எதிரி விமானங்களை வேட்டையாடி அழிக்கக்கூடிய ஒரு ஸ்மார்ட் ஏவுகணையாகும். ஏவுகணையைச் செலுத்தும் விமானி இலக்கைக் கண்களால் பார்க்க முடியாது. சொந்த ரேடாரைப் பயன்படுத்தி, எதிரி விமானத்தைத் தானாகவே கண்காணித்துத் தாக்கும் ஏவுகணையாகும்.
அஸ்ட்ரா ஏவுகணை குடும்பத்தில் முதலில் உருவாக்கப் பட்ட Astra Mk1 ஒரு நம்பகமான வேலைக்காரன் என்று கூறப்படுகிறது. 3.6 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 154 கிலோ எடை கொண்டது. 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும். மேலும் தப்பிக்க முயற்சிக்கும் எதிரியின் விமானங்களைத் துரத்தித் தாக்கும் Astra Mk1 ஒரு புத்திசாலித்தனமான, ஆட்டோமேட்டிக் ஏவுகணையாகும்.
விரிவான மேம்படுத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு, முழு உற்பத்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 2,971 கோடி ரூபாய் மதிப்பில் 350 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில், பாதுகாப்பு அமைச்சகத்துடன் பாரத் டைனமிக்ஸ் கையெழுத்திட்டுள்ளது. அதிகபட்சம் ஒரு ஏவுகணையின் உற்பத்தி விலை 8 கோடி ஆகும் . இது ஒரு ஏவுகணையை இறக்குமதி செய்யும் செலவை விட மிகக் குறைவாகும்.
அடுத்ததாக, சுமார் 175 கிலோ எடையும், 190மில்லிமீட்டர் விட்டமும் கொண்ட Astra Mk 2 உருவாக்கப்பட்டது. 145 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, dual-pulse தொழில் நுட்பத்தைக் கொண்டு இயங்கக் கூடியதாகும். இந்த தொழில்நுட்பம் எதிரி விமானங்கள் தப்பிக்க முடியாத மண்டலம் என்று அழைக்கப் படுகிறது.
இப்போது, மிகவும் மேம்பட்ட வான்-வான் ஏவுகணையாக Astra Mk 3 ஏவுகணையை DRDO தயாரித்துள்ளது. காண்டீபம் என்று அழைக்கப்படும் இந்த மூன்றாவது தலைமுறை Astra ஏவுகணை நாட்டின் பாதுகாப்புக்கான ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது.
காண்டீபம் ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறப்படும் சீனாவின் PL-15 ஏவுகணையையும், 240 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று உறுதிப்படுத்தப்பட்ட அமெரிக்க AIM-174 ஏவுகணையையும் விஞ்சிவிட்டது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் காண்டீபம் ஏவுகணை 340 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டதாகும். எனவே, காண்டீபம் ஏவுகணை உலகின் மிக நீளமான ஏவுகணையாகும்.
அதாவது, இலக்கு 20 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்போது 340 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும், இலக்கு 8 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது 190 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் எதிரி வான்வழி இலக்குகளைத் தாக்கும் குறிப்பிடத்தக்கத் திறனுடன் காண்டீபம் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,1500 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் தாக்கும் திறனையும் DRDO வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. காண்டீபம் ஏவுகணை மேக் 4.5 வேகத்தில் பறக்கும். இது ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
தற்போது, இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்களில் Meteor ஏவுகணைகளுடன் காண்டீபம் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில், சுகோய் Su-30MKI தேஜஸ் மற்றும் MiG-29 போர் விமானங்களிலும் பொருத்தப்பட உள்ளது. Solid Fuel Ducted Ramjet உந்துவிசை அமைப்பு, இந்த காண்டீபம் ஏவுகணையின் தனித்துவமான அம்சம் ஆகும்.
ராம்ஜெட் இன்ஜின் முன்னோக்கி செல்லும்போது, அது காற்றை உள்ளிழுக்கிறது. இன்ஜின் வடிவமைப்பு காற்றைச் சுருக்குகிறது. சுருக்கப்பட்ட காற்றுடன் எரிபொருள் கலக்கப்படுகிறது. எரிபொருள் மற்றும் காற்று கலவை எரிகிறது. எரிந்த வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, உந்துதலை உருவாக்குகிறது. ராம்ஜெட் இன்ஜினில் (Turbine) டர்பைன்கள் மற்றும் (Compressor) கம்ப்ரஸர்கள் போன்ற நகரும் பாகங்கள் இல்லை.
இது முன்னோக்கி நகரும்போது மட்டுமே செயல்படுகிறது. மணிக்கு 3 மடங்கு ஒலியின் வேகத்தில் செயல்படுகிறது. இது வெளிப்புற காற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், ராக்கெட் என்ஜின்களை விட அதிக ஆற்றல் திறன் கொண்டுள்ளது.
சோதனைக்காக, Gallium Arsenide தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Active Electronically Scanned Array என்னும் தேடுபொறியைக் காண்டீபம் ஏவுகணை பயன்படுத்துகிறது. உற்பத்தி என்று வரும் போது, Gallium Nitride (GaN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடுபொறியை மேம்படுத்த DRDO திட்டமிட்டுள்ளது.
Gallium Nitride தொழில்நுட்பம் அதிக வெப்பநிலையிலும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. குறைந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, மின்னணு நெரிசலுக்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டதாக விளங்குகிறது. ஏவுகணைகளைக் குழப்பும் எதிரி நாட்டின் மின்னணு எதிர் நடவடிக்கை தந்திரங்களைப் பார்த்து, அதிலிருந்து தப்பி, இலக்கை தாக்கி அழிக்கும்.
காண்டீபம் ஏவுகணை உற்பத்தி, நாட்டின் அதிகமான வேலைவாய்ப்புக்களைத் தருகிறது. மற்ற அறிவியல் திட்டங்களிலும் பயன்படுத்தும் வகையில் தான் காண்டீபம் ஏவுகணை தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போரில் தேவைக்கேற்ப அதிக ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமையைக் கொடுக்கிறது.
ஏற்கெனவே மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா,பிரேசில் போன்ற நாடுகள் அஸ்ட்ரா ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய முன் வந்துள்ளன. காண்டீபத்தின் வெற்றிகரமான வளர்ச்சி பாதுகாப்பு தயார்நிலைக்கான ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. காண்டீபம் ஏவுகணை வெறும் ஆயுதம் பற்றியது அல்ல. இது இந்தியப் போர் விமானங்களுக்கான முழுமையான போர் சூழலை உருவாக்குவது பற்றியதாகும். வான்வழிப் போரின் நிலப்பரப்பை மறுவரையறை செய்யும் காண்டீபம் ஏவுகணையால் வானத்தைத் தன் வசமாக்கி உள்ளது இந்தியா.
இதுவரை வேறு எந்த அமைப்பிலும் இல்லாத (speed, accuracy, survivability) வேகம், துல்லியம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய தன்மையை இந்த காண்டீபம் கொண்டுள்ளதாகக் கூறியுள்ள DRDO தலைவர் Dr. Sameer Kamat டாக்டர் சமீர் காமத், இன்னும் 5 ஆண்டுகளில், முழு அளவிலான காண்டீபம் ஏவுகணை உற்பத்தியை முடிக்க இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் ஆயுதம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா, இப்போது உலகத்தின் அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரித்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.