சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரை கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த, சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த காவ்யா செல்டர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக, ரத்தினசபாபதி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கட்டுமானம் தொடர்பான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை இழுத்தடிப்பு செய்வதற்காக ஆவணங்களை வழங்காமல் சிஎம்டிஏ காலதாமதம் செய்து வந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்
நீதிமன்றம் அனுப்பிய சம்மனை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தரப்பில் பெறவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து வெள்ளிக்கிழமை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.