கோவை மாவட்டம், ஜடையம்பாளையத்தில் மத்திய அரசு நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட பகுதி நேர நியாயவிலைக்கடையை, திமுக நிர்வாகியை வைத்துத் திறந்த தொடக்க வேளாண்மை சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜடையம்பாளையம் புதூரில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியின் பங்களிப்புடன், சுமார் 13 லட்சம் ரூபாய் செலவில் புதியதாகப் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டது.
இந்த நியாய விலை கடை கட்டடத்தை விதிகளுக்கு மாறாக, காரமடை ஒன்றிய திமுக செயலாளரான கல்யாணசுந்தரம் என்பவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவரே பகுதி நேர நியாய விலை கடையின் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலாளரான பட்டிலிங்கம் என்பவரே விதிகளுக்கு மாறாகக் கட்சி நிர்வாகியை அழைத்துத் திறப்பு விழாவை நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து பட்டிலிங்கத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க இணை பதிவாளர் உத்தரவிட்டார்.