ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி எனும் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தினர் நுழையவும், தேர்த் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதிப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.
கோயிலுக்குள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்வதையும், திருவிழாவில் பங்கேற்பதையும் மாவட்ட எஸ்.பி.யும், வருவாய் கோட்டாட்சியரும் உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
மேலும், ஆலய நுழைவுச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்த அவர், சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டார்.