மணப்பாறை அருகே வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக் கூறி, தனியார் வங்கி ஊழியர்கள் விவசாயியைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொய்கைப்பட்டி அடுத்த வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ற விவசாயி, தனியார் வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
நிலுவைத் தொகையைச் செலுத்தத் தாமதமான நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள், வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், மணப்பாறையில் உள்ள வங்கிக்கு முருகேசனை அழைத்துச் சென்று, தரக்குறைவாகப் பேசி, தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள், வங்கி ஊழியர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இது குறித்துத் தகவலறிந்த போலீசார், வங்கி ஊழியரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி முருகேசன் வலியுறுத்தியுள்ளார்.