தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தமுள்ள 105 சாட்சிகளில், 52 பேரிடம் மட்டுமே விசாரிக்கலாம் என சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து சாட்சிகளையும் முறைப்படி விசாரிப்பது தான் நியாயமானது எனவும், அதற்கு நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆகையால், மீதமுள்ள 53 சாட்சிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், தினசரி அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்பட்டு சாட்சி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி வேல்முருகன்உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.