திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க, ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூரில் கடந்த சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை, மர்ம நபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியும், குற்றவாளியை பிடிப்பதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்பி, சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, குற்றவாளியை ஆந்திராவின் சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், குற்றவாளி தப்பிவிடாமல் இருக்க ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.