மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு சம்பந்தமாக கடந்த 28ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கடுமையான சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிஐ டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
ஐந்தாவது நாளாக சம்பவங்கள் நிகழ்ந்த அங்காடிமங்கலம் விளக்கு மற்றும் மடப்புரம் விளக்கு ஆர்ச் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமாரை தனிப்படை காவலர்கள் வேனில் ஏற்றிச் சென்றது குறித்து திசை காட்டி வைத்து தொழில்நுட்ப ரீதியாக தத்ரூபமாக ஆவணப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அஜித்குமார் நவீன் குமார் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோருக்கு உணவு வாங்கி கொடுத்ததாக கூறப்படும் தட்டாங்குளம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.