கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஷ்ரூத் – ஸ்ருதி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் காயமடைந்த மனைவி ஸ்ருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதிகாலையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் மயக்கத்தில் இருந்த அவரை, விஷ்ரூத் கத்தியால் மூன்று இடங்களில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர், விசாரணை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.