அரபு நாடுகளின் நிதி உதவியுடன் பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றிய சாங்குர் பாபாவிற்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்த சாங்குர் பாபா என்ற ஜலாலுதீன், அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா, நவீன் ரொஹரா ஆகியோரை, மதமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடை கைது செய்தது.
சாங்குர் பாபாவிடம் உள்ள 22 வங்கி கணக்குகளில், 60 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும், இத்துடன் சுமார் நூறு கோடிக்கும் அதிகமான சொத்தும் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், சாங்குர் பாபாவின் வழக்கை மத்திய அமலாக்கத்துறை மற்றும் தேசியப் புலனாய்வு முகமையும் விசாரிக்கிறது.
கடந்த வாரம், சாங்குர் பாபாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சாங்குர் பாபாவிற்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சட்டவிரோத மதமாற்ற வழக்கில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், இதை விசாரிக்க மத்திய அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.