திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆடிக்கிருத்திகை தரிசனத்திற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகை தந்தனர்.
கூட்டம் அதிகளவு காணப்பட்டதால் நுழைவாயிலில் கயிறு கட்டி, போலீசார் பக்தர்களை பாதுகாப்பாக கோயிலுக்குள் அனுமதித்தனர்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 3ஆம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவருக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விடுமுறை தினம் மற்றும் ஆடிக்கிருத்திகை என்பதால், கோயிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 5ஆம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடைபெற்றது. சுவாமி தரிசனத்திற்காக அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் கோயிலில் கூட்டம் அலைமோதியது.
கோயிலில் முடிக்காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டநெரிசல் காரணமாக ஏராளமான பக்தர்கள், கோபுரம் முன் தேங்காயை உடைத்து சுவாமி தரிசனம் செய்து, வீடு திரும்பினர்.
நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோயிலில் முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் வைர வேலுடன் காட்சியளித்த சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.